திருப்பாவை – 3ம் பாசுரம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.
விளக்கம்: திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர்

(விழுப்புரம் மாவட்டம்)  உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

திருப்பாவை – 2ம் பாசுரம் (17.12.2012 அன்று தினமணி நாளிதழில் வெளியாகும் பாசுர விளக்கம்)

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


விளக்கம்:
திருப்பாவை முதல் பாட்டில், நோன்பு யாரை முன்னிட்டு நோற்பது என்று கூறி தோழியரைத் துயில் எழுப்பி அழைத்த ஆண்டாள், இந்தப் பாட்டில் நோன்பு நோற்பவர் செய்யக் கூடியவற்றையும் விலக்க வேண்டியவற்றையும் கூறுகிறாள்.
இந்த வையத்தில் வாழும் பேறு பெற்றவர்களே! வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி வாழ, வாழ்வில் கடைத்தேற வேண்டிய வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் கள்ளத் துயில் கொண்டு கண்வளரும் பரமனின் திருவடியைப் போற்றிப் பாடி, நம் ஆசார்யர்களாகிற பெரியோர்களுக்கு இடுகின்றதான ஐயத்தையும், துன்பத்தே உழல்வார்க்கு இடும் பிட்சையையும் நம் சக்தி உள்ளளவும் இட்டு மகிழ்வோம். இப்போது, நமது நோன்புக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கூறுகிறேன்… காது கொடுத்துக் கேளுங்கள். நோன்பு நோற்கத் தொடங்கிய பிறகு நாம் உடலுக்கு ஊட்டமும் உரமும் தரும் நெய் உண்ணக்கூடாது. பாலை உண்ணக் கூடாது. விடியற் காலத்தே உடற்தூய்மை பேண நன்னீரால் குளித்துவரவேண்டும். பின்னர் வழக்கமாக நாம் மேற்கொள்ளும் கண்ணுக்கு மையிட்டு அலங்காரம் செய்தல், கருங்கூந்தலிலே மலர் சூடி அழகு சேர்த்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தே விலக்குவோம். இவ்வாறு நம் முன்னோர்கள் எதைச் செய்யக்கூடாது என்று வைத்தார்களோ அவற்றை செய்யாதிருப்போம். பெருமான் பக்கலில் நின்று, கொடுமையும் தீமையும் விளைவிக்கும் சொற்களைக் கூறாதிருப்போம் என்று நோன்புக் காலத்தின் கிரியைகளை தோழியர்க்குக் கூறுகிறாள் ஆண்டாள் இந்தப் பாடலில்!

பெருங்குளம் ஸ்ரீமாயக்கூத்தர் கோவிலில் இராப்பத்து உற்ஸவம்

கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு 108 திவ்ய தேசங்களில் ஒன்றும் நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றுமான ஸ்ரீமாயக்கூத்தர் கோவிலில் இராப்பத்து உறஸ்வம் நடைபெறுகிறது.

 

கார்த்திகை கடைசி சோமவாரம் – சங்கடம் தீர்க்கும் சங்க(ர)னுக்கு சங்காபிஷேகம்

சங்கரனுக்கு சங்காபிஷேகம்
![இன்று கார்த்திகை கடைசி சோமவாரம்]
By – சிவ.அ. விஜய்பெரியசுவாமி


“”கலங்கினேன் கலங்காமலே வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே”
என்கிறார் மாணிக்கவாசகர். எத்தகைய சோதனைகள்,வேதனைகள் என்றாலும் சரி, திருக்கழுக்குன்றம் வந்து, அங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்கித் தொழுதால் நம் வினைகள் தவிடுபொடியாகும்.
மலை மேலுள்ள மலைக்கோயிலில் வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். மூலவரின் பின்புறம் ஈசனின் திருமணக் கோலச் சிற்பம் உள்ளது. பார்வதி தேவி சொக்கநாயகி என்ற திருப்பெயரில் அருள்பாலிக்கிறாள். இங்கு நந்தி கிடையாது. மலைக்கோ யில் ஈசனை இந்திரன் “இடி வழிபாடு’ செய்து வழிபடுகிறான். அதை நிரூபிக்கும் வகையில் “”இடி வழிபாடு’ மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருக்குமாம்.
மார்கண்டேயர் இத்தல வேதகிரீஸ்வரரை வழிபட வந்தபோது அபிஷேகம் செய்ய விரும்பினார். அபிஷேகம் செய்ய தீர்த்தக் குளத்திலிருந்து நீர் எடுத்து வர முயன்றபோது மார்கண்டேயரிடம் பாத்திரம் இலலை. அப்போது மார்கண்டேயர் ஈசனை வேண்ட அந்த தீர்த்தக் குளத்தில் வலம்புரி சங்கு தோன்றியது. பிறகு மார்கண்டேயரும் வேதகிரீஸ்வரரை வலம்புரி சங்கால் அபிஷேகித்து வழிபட்டார். அன்று முதல் குளமும் சங்கு தீர்த்தக்குளம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரி சங்கு தோன்றுகிறது. இந்த சங்குகள் இத்தலத்தில் “தாழக்கோயில்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீபக்த வசலேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. குளத்தின் தென்கிழக்கில் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீருத்ரகோடீஸ்வரர் ஆலயம் உள்ளது. சங்கு தீர்த்தக் குளத்தின் மேற்கே மார்கண்டேயர் வழிபட்ட “தீர்த்தகிரீஸ்வரர்’ ஆலயம் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில், கார்த்திகை மாத கடைசி திங்களன்று வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது சங்கு தீர்த்தக் குளத்தில் கிடைத்த சங்குகளே முதன்மை பெறும். அவ்வகையில் வருகிற 10.12.12 அன்று ஈசனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சங்கரனுக்கு நிகழும் சங்காபிஷேகத்தை தரிசித்தால் சங்கடங்கள் தீருமன்றோ…!

இன்றைய பஞ்சாங்கம் – 10.12.2012

திங்கட்கிழமை

10
Monday, December 10, 2012

ராகு காலம்: 7.30-9.00
எம கண்டம்: 10.30-12.00
நல்ல நேரம்: காலை 9.15-10.15 மாலை 4.45-5.45
இன்றைய ராசிபலன்

மேஷம்:சாந்தம்
ரிஷபம்:போட்டி
மிதுனம்:ஆர்வம்
கடகம்:கவலை
சிம்மம்:தடங்கல்
கன்னி:சலனம்
துலாம்:பகை
விருச்சிகம்:ஆக்கம்
தனுசு:பரிசு
மகரம்:பயம்
கும்பம்:தெளிவு
மீனம்:உதவி
பஞ்சாங்கம்…

நந்தன வருடம் கார்த்திகை 25; அமிர்த யோகம் 43.37க்கு மேல் மரணயோகம். கரணம் 9.00-10.30; சூரிய உதயம் 6.17 விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 1 விநாடி 3; சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
துவாதசி 38.29 (PM 9.41) சுவாதி 43.37 (PM 11.44)
குளிகை: 1.30-3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடாணை, திருக்கடவூர் இத்தலங்களில் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம். சுபமுகூர்த்த தினம்.

நாளைய உழவாரப் பணி

நாளை 9.12.12. அன்று திருச்சக்தி முற்றம் பெரியநாயகி உடனூறை சிவக்கொழுந்தீஸ் ­வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி நடைபெற இருக்கின்றது. தொடர்புக்கு சிவமிகு.ராஜேஷ் ஐயா 9940205930, 8754478855 சிவமிகு.சரவணன் ஐயா 9444304980

சிவன் கோவில்களில் டிசம்பர் 19ல் ஆருத்ரா தரிசனம்

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிச.19-ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.


உற்சவ விபரம்: டிச.20-ம் வெள்ளி சந்திரபிரபை வாகன வீதிஉலா, 21-ம் தேதி தங்கசூரிய பிரபை வாகன வீதிஉலா, 22-ம் தேதி வெள்ள பூதவாகன வீதிஉலா, 23-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 24-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 25-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 26-ம் தேதி தங்கரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுங்குதிரை வாகன வீதிஉலா, 27-ம் தேதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா, இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. டிச.28-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. டிச.29-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகர் எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை உற்சவ ஆச்சாரியார் எஸ்.வி.தில்லைநாகபூஷண தீட்சிதர், செயலாளர் ஏ.ஆனந்ததாண்டவ தீட்சிதர், துணைச் செயலாளர் ரா.வெ.கிருஷ்ணசாமி தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

சிதம்பரம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து  சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

சுப்ரபாத சேவை டிக்கெட்: கூடுதலாக விற்க முடிவு

திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் இனிமேல் இணையதளம் மூலம் கூடுதலாக விற்பனை செய்யப்படும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் கூறினார்.


திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற, தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சியில் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் யோசனை தெரிவித்தனர். குறைகளையும் அவர்கள் கூறினர். அவர்களுக்கு செயல் அதிகாரி பதில் அளித்தார்.
பக்தர்களிடம் கனிவாக நடந்து கொள்ள ஏழுமலையான் சந்நிதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
வைகுண்ட ஏகாதசி, துவாதசி சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் அம்சங்கள் சப்தகிரி மாத இதழில் இனி வெளியிடப்படும். அதிக அளவில் பக்தர்களுக்கு இணையதளம் மூலம் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் அளிக்கப்படும் என்றார்.
காசியில் சிதிலமடைந்துள்ள விஷ்ணு ஆலயங்களுக்கு புனர்நிர்மாணப் பணிகள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி அன்று அங்கப்பிரதட்சணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் உள்ள யோக நரசிம்ம ஸ்வாமிக்கு நரசிம்ம ஜெயந்தி அன்று மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் தேவஸ்தான வானொலி மூலம் ஆன்மிக நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும். பக்தர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு தேவஸ்தான ஊழியர்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் நிகழ்ச்சியில் பக்தர்களிடம் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மேலும் அந்தமான், போர்ட் பிளேரிலிருந்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை ஜ்ஜ்ஜ்.ள்ங்ஸ்ஹர்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் உள்ள இ-தர்ஷன் கவுன்ட்டரில் வழங்கப்படும் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வரிசையை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சின்னங்காரி ரமணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

பாண்டமங்கலம் கால பைரவருக்கு சிறப்பு லட்சார்ச்சனை

பரமத்திவேலூர் வட்டம், பாண்டமங்கலம் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள மகா கால பைரவருக்கு வியாழக்கிழமை இரவு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


கார்த்திகை மாதம் பூர நட்சத்திரத்தில் தேய்பிறை அஷ்டமியில் மகா கால பைரவர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பாண்டமங்கலம் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள பைரவருக்கு, செவ்வாய்க்கிழமை சிறப்பு யாக வேள்வி தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெற்றது. முன்னதாக திங்கள்கிழமை மாலை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை கலாச அபிஷேகம், யாக வேள்வி மற்றும் 18 வகையான மூலிகைகளால் அபிஷேகங்களும் நடைபெற்றன.
பின்னர், பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் கால பைரவர் வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.